The farmer who killed the drunken victims was killed One arrested
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் குடிபோதையில் தகராறு செய்தவரை விவசாயி ஒருவர் தாக்கியதால் அவரை அடித்துக் கொன்றுவிட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். நால்வரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் கே.வி.எஸ் தெருவைச் சேர்ந்தவர் சோலை மகன் கிருஷ்ணமூர்த்தி (37). இவர் ஒரு விவசாயி.
வியாழக்கிழமை இரவு இவரிடம் பக்கத்து வீட்டுக்காரரான எஸ்.தர்மராசு (47) குடித்து போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, தர்மராசுவை தாக்கியுள்ளார். இதனால் தர்மராசுவுக்கு காயம் ஏற்பட்டதாம்.
இதுகுறித்து தர்மராசு மனைவி வெள்ளையம்மாள் திருப்பூரில் வேலைபார்த்துவரும் தனது மகன்கள் மணிகண்டன் (20) மற்றும் ராஜாங்கம் (17) ஆகியோருக்குத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று ஊருக்கு வந்த அவர்கள் இருவரும் தனது நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆலங்குடி காவலாளர்கள் வழக்குப் பதிந்து வெள்ளையம்மாளை கைது செய்தனர். தலைமறைவான மணிகண்டன், ராஜாங்கம் உள்ளிட்ட நால்வரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி காவலாளர்கள் அளித்த உறுதியின்பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
