தஞ்சாவூர்

கரும்பு விற்பனைச் செய்ததற்கான ரூ.4 இலட்சம் நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலை தரததால் மனவேதனை அடைந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை அடுத்துள்ளது அணைக்குடி மேலத்தெரு. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (58). இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், கவாஸ்கர், கார்த்திகேயன், இளையராஜா என மூன்று மகன்களும் உள்ளனர்.

இவர் தனக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். நகைகளை அடகு வைத்தும், பலரிடம் கடன் வாங்கியும் ஆழ்குழாய் கிணறு ஒன்றை செல்வராஜ் தனது வயலில் அமைத்துள்ளார், ஆனால், அதில் தண்ணீர் வரவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் கரும்பு பயிர் சரியாக முளைக்கவில்லை.

மேலும், அவருக்குக் கரும்பு விற்பனைச் செய்ததற்கான ரூ.4 இலட்சம் நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலை தரவில்லை. இதன் காரணமாக செல்வராஜ் மனமுடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பிவரவில்லை. நேற்று காலை செல்வராஜ் தனது வயலில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் செல்வராஜ் வீட்டில் தெரிவித்துள்ளார்.

கரும்பு விற்பனைச் செய்ததற்கான ரூ.4 இலட்சம் நிலுவைத் தொகையை தரமால் சர்க்கரை ஆலை ஏமாற்றியதாலும், நகைகளை அடகு வைத்து அமைத்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததாலும் மனமுடைந்த செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவையாறு காவலாளர்கள், செல்வராஜ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி தகவல் அறிந்த துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், பொதுச்செயலாளர் வக்கீல் ராஜ், வட்டார தலைவர்கள் அமர்சிங், மகாதேவன், நகர தலைவர் ராஜா ஆகியோர் செல்வராஜ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.