Asianet News TamilAsianet News Tamil

காட்டெருமை முட்டி தூக்கி வீசியதில் விவசாயி பலி; குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டம்...

The farmer kills by wild buffalo People fight for the relief of the family ...
The farmer kills by wild buffalo People fight for the relief of the family ...
Author
First Published Apr 10, 2018, 9:10 AM IST


திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த காட்டெருமை முட்டி தூக்கி வீசியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பிச்சை (57). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். 

இவர், நேற்று தோட்டத்துக்கு சென்று புதர்களை அகற்றி கொண்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த காட்டெருமை அவரை தாக்கியது. காட்டெருமையிடம் இருந்து தப்பிக்க அவர் ஓட்டம் பிடித்தார். இருப்பினும் காட்டெருமை அவரை விடாமல் துரத்திச் சென்ற முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினரும், காவலாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அவசர ஊர்தி மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் மக்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவசர ஊர்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  மேலும், வனத்துறையை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர். 

அதனைத் தொடர்ந்து வனத்துறையினரும், காவலாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. பின்னர், வனத்துறையின் சார்பில் உடனடி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வன அலுவலர் முருகன் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். அதன்பின்னரே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதனையடுத்து அவருடைய உடல் உடற்கூராய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு வந்த குறிஞ்சிநகர் மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க அகழி மற்றும் பாதுகாப்புவேலி அமைக்க வேண்டும். 

குறிஞ்சிநகர் செல்லும் சாலையினை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரி கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்  துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி, தாசில்தார் பாஸ்யம், அ.தி.மு.க நகர செயலாளர் ஸ்ரீதர், மேல்மலை ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இது தொடர்பாக வனத்துறை சார்பில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios