இரண்டு நாள்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்ற பிரபல ரௌடி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செஞ்சிதேவர் மகன் மனோகரன் (43). பிரபல ரௌடியான மனோகரன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மனோகரன் சென்னையில் வசித்து வந்துள்ளார். சென்னையில் இருந்து மனோகரன் சொந்த ஊரான ஆத்தூருக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு வந்துள்ளார்.
திங்கள்கிழமை அதிகாலை மனோகரனை மண்ணியாற்றங்கரை பகுதியில் வைத்து சில மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை காவல் சூப்பிரண்டு கலித்தீர்த்தன், மணல்மேடு காவல் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோகரன் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணல்மேடு காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
