the family members who died in a fire accident 1 lakh 1 lakh relief

சென்னை வடபழனியில் அடுக்கு மாடி தீ விபத்தில் உயிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை வடபழனியில் உள்ள தெற்கு பெருமாள் கோவிலில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் அச்சகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை கீழ்தளத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. 

அப்போது குடியிருப்பு வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் பற்றிய தீ, குடியிருப்புகளுக்கும் மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால், மேல்தளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

சம்பவ இடத்துக்கு மூன்று வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், மீனாட்சி, செல்வி, சிறுவன் சஞ்சய், சிறுமி சந்தியா ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். 

20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதில் தீக்காயமடைந்த 6 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்த கொடூர தீ விபத்தில் உயிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.