சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). மரம் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி சரவணா (45) மகன்கள் முனிவேல் (25), சதீஷ் (20), கோபால் (16), மகள் நதியா (14) ஆகியோர் உள்ளனர்.

ஜெயராமனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் குடித்து விட்டு தினமும் வீட்டில் வந்து தகாராறு செய்து வந்தார். இதுபோலவே நேற்று முன்தினம் இரவும் ஜெயராம் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். 

குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வருவதால் அவரின் மகன்கள் வெறுப்படைந்து, ஜெயராமன் படுத்திருந்த கட்டிலுடன் கட்டி, உறவினரின் விவசாய கிணற்றில் போட்டு விட்டு வந்து விட்டனர்.

அது இரவு நேரம் என்பதால், கிணற்றில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். அப்போது முனிவேல், சதீஷ் இருவரும், தங்கள் தந்தையை கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு வந்ததாக சொல்லியுள்ளனர்.

இதனைக் கேட்ட அவர்கள், மேச்சேரி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். மேச்சோரி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் ஜெயராமனை தேடினர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பின்னர் ஜெயராமன் உடலை தீயணைப்பு வீரர்கள் கட்டிலுடன் வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து, முனிவேல், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.