ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் அணையில் நீர் இருப்பு முற்றிலுமாக குறைந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நீடித்து வருகிறது.
பருவமழை பெய்வதன் மூலம், அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று நம்பி மஞ்சள், வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நட்டத்தை சந்திக்க நேரிட்டது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், பயிர்கள் அனைத்தும் நீரின்றி கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை மாநில மற்றும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் புள்ளியியல் துறையினர் வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
சாகுபடி செய்யப்பட்ட விளைநிலப்பரப்பு, பாதிப்புக்குள்ளான பயிர் விவரம், பாதிப்பின் அளவு ஆகியவை குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பினை தொகுக்கும் பணியில் வேளாண் இணை இயக்குநர் இராமசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். வறட்சி பாதிப்பு விவரம் தொகுக்கப்பட்டபின், அரசுக்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:
“வறட்சி குறித்த கணக்கெடுப்பு பணி பெரும்பாலும் நிறைவடைந்து விட்டது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வறட்சி பாதிப்பு உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பு விவரங்களைத் தொகுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கணக்கெடுப்பில் விடுபட்ட விவசாயிகள் தற்போது மனு அளித்து வருகின்றனர்.
அந்த மனுக்கள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, பாதிப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.
