The driver of the bus kicked the pregnant woman

கர்ப்பிணி பெண் பயணியை, அரசு பஸ் டிரைவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனது உறவினரான கர்ப்பிணி பெண்ணை உடன் அழைத்துக் கொண்டு ஈரோடு நகர பேருந்தில் சென்றுள்ளார்.

பேருந்து நிறுத்தத்தில், அந்த பெண் இறங்குவதற்கு முன்பாகவே பேருந்தை இயக்கியதால் அந்த பெண் தடுமாறியுள்ளார். இது குறித்து பஸ் டிரைவரிடம் அந்த கர்ப்பிணிப் பெண் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில், அந்த பெண்ணை டிரைவர் சின்னசாமி எட்டி உதைத்துள்ளார்.

இதனைப் பார்த்த சக பயணிகள், அவருடன் வந்த உறவினரும் கடும் அதர்ச்சி அடைந்தனர். டிரைவருக்கு எதிராக பேருந்து பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர்.

உடனடியாக மற்ற பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் விரைந்து சென்று உறவினர்களையும், பயணிகளையும் சமாதானம் செய்தனர். இதனிடையே கர்ப்பிணியை தாக்கியதாக கூறப்படும் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கர்ப்பிணி பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.