The drinking water project at turtle speed People rushed to complete the request
நீலகிரி
ஊட்டியில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போடப்பட்ட குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊட்டி நகராட்சியில் சுமார் 86 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இதுதவிர ஆண்டுக்கு சுமார் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக பார்சன்ஸ் வேலி, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகள் இருக்கின்றன. ஊட்டி நகரின் குடிநீர் தேவையை பார்சன்ஸ் வேலி அணைதான் பெரிதும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த அணையில் இருந்து முதலாவது மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 இலட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிது. ஆனால், ஊட்டி நகரின் ஒரு நாள் தண்ணீர் தேவை 110 இலட்சம் லிட்டராக இருக்கிறது.
மார்லி மந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளில் இருந்து 6 இலட்சம் லிட்டருக்கும் குறைவாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது என்பது வருத்தமளிக்க கூடிய ஒன்று.
கோடைக் காலத்தில் இந்த அணைகள் முற்றிலும் வறண்டு விடும். இவற்றின் மூலம் தண்ணீர் வழங்கப்படும் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் பார்சன்ஸ் வேலி அணைத் தண்ணீர் வழங்கும் வகையில் மூன்றாவது குடிநீர் திட்டம் தீட்டப்பட்டது.
இந்த மூன்றாவது குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால், இன்னும் முடியவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 30 இலட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
மேலும், குடிநீரைச் சேமித்து வைக்கும் வகையில் டைகர்ஹில், கோடப்பமந்து, கம்பிசோலை உள்ளிட்ட இடங்களில் தலா 10 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மொத்தம் 4 நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், மூன்று குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டு விட்டது.
கோடப்பமந்து பகுதியில் மட்டும் குடிநீர்த் தொட்டி கட்டும் பணி தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர பார்சன்ஸ்வேலி அணையில் நீரேற்றும் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மக்கள் கூறியது:
“இந்த பணிகளை விரைந்து முடித்தால் ஊட்டி நகராட்சியின் அனைத்து இடங்களிலும் குடிநீர் தங்குதடையின்றி வினியோகம் செய்ய முடியும். ஆனால், இந்த மூன்றாவது குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, ஊட்டி நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மூன்றாவது திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
