மீஞ்சூர் அருகே நேற்றிரவு வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிய எஸ்ஐ மகன்மீது லாரி மோதியதில், அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். கும்மிடிப்பூண்டி காவல்துறை டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திக் (23). மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு கார்த்திக், வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மீஞ்சூர் அருகே நாலூர் ஏரிக்கரை அருகே வந்தபோது, மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற லாரி வேகமாக மோதியது.

இதில் பைக்கில் சென்ற கார்த்திக் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே கார்த்திக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் தலையில் தான் பலமாக அடிபட்டிருந்தாகவும் கூறியுள்ளார். ஒருவேளை ஹெல்மட் அணிந்திருந்தால் அவருடைய உயிர் காப்பாற்ற பட்டிருக்கும். 

மேலும் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.