போராடுவோரை குறை கூற ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை எனவும் மக்களை அவர்கள் முட்டாள்கள் என நினைக்கிறார்கள் எனவும் திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளரான திவ்யபாரதி, கக்கூஸ் என்ற ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். தீண்டாமை, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைக்கு எதிராக திவ்யபாரதி தொடர்ந்து போராடி வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரையில் மாணவர் விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் பாம்பு கடித்து இறந்தார். அவர் உயிரிழந்ததற்கு உரிய இழப்பீடு கேட்டும், விடுதியை பராமரிக்கக் கோரியும் சக மாணவர்களுடன் திவ்யபாரதி போராட்டம் நடத்தினார்.

இது தொடர்பாக திவ்யபாரதி மீது வழக்கு ஒன்று பதியப்பட்டது. இந்த நிலையில், திவ்யபாரதி இன்று மதுரையில் கைது செய்யப்பட்டார். அவரின் கைதுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த திவ்யபாரதி, மக்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களையும் இளைஞர்களையும் பயமுறுத்தவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் போராடுவோரை குறை கூற ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை எனவும் மக்களை அவர்கள் முட்டாள்கள் என நினைக்கிறார்கள் எனவும் திவ்யபாரதி தெரிவித்தார்.

மக்களுக்கு எதிராக செயல்படும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.