5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பேருந்தில் இலவச பஸ் பயணம் தொடர்பான அறிவிப்பு தமிழக சட்ட சபையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சீட் வேண்டுமென்றால் டிக்கெட் கட்டாயம் என தெரிவித்துள்ளது.
5 வயது குழந்தைகளுக்கு பேருந்தில் இலவசம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் வரவேற்று இருந்தனர்.

இருக்கை வேண்டும் என்றால் கட்டணம் கட்டாயம்
இந்தநிலையில் தமிழக போக்குவரத்துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் சிலர் தங்களது குழந்தைகளை மடியில் அழைத்து செல்வது அசௌகரியம் ஏற்படும் எனவும், விருப்பமுள்ளவர்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு பயணச்சீட்டு பெற்று பயணிப்பது தேவை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அவர்களது குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் பயணிக்கும் போது அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லையென்று கூறப்பட்டுள்ளது. . மேலும் அவ்வாறே தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகம் தகவல்
எனவே, தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் அரைக்கட்டணம் சம்மந்தமாக, 3 வயது முதல் 12 வயது என்பதற்கு பதிலாக, 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக்கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இருக்கை வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மடியில் அழைத்து செல்லும் குழந்தைகளுக்கு கட்டணம் தேவையில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
