நாமக்கல்

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்..

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள வலசையூரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன் ராஜேஷ்குமார் (19). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. வேதியியல் பாடப்பிரிவில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது நண்பரும், இராசிபுரம் அருகே உள்ள பொறியியல் கல்லூரி மாணவருமான சஞ்சயுடன் (19) சேர்ந்து நாமக்கல்லிற்கு மற்றொரு நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

நாமக்கல் பைபாஸ் சாலை கருங்கல்பாளையம் பிரிவு சாலை பகுதியில் வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார், எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ராஜ்குமார், சஞ்சய் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த வழியாகச் சென்றவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இங்கு மாணவர் ராஜேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே படுகாயமடைந்த மற்றொரு மாணவர் சஞ்சய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து நல்லிப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கவேல் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரை ஓட்டி வந்த நபர், விபத்து நடந்த இடத்திலேயே காரை விட்டுவிட்டு தலைமறைவானார். விபத்துக்கு காரணமான காரை மீட்டு வந்த காவலாளர்கள் தலைமறைவான ஒட்டுநரைத் தேடி வருகின்றனர்.