புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த மத்திய குற்றப்பிரிவு பெண் தலைமை காவலர் சங்கீதா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஏலச்சீட்டு மோசடி தடுப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

சங்கீதா, சில ஆண்டுகளாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஜூன் மாதம் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தகவலறிந்து வட மாநிலத்தில் பணியாற்றி வரும் அவரது சகோதரர் பாலாஜி  சங்கீதாவை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால், சங்கீதாவை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால்  சங்கீதாவின் சகோதரர்கள், அவரை தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைதொடர்ந்து தகவலறிந்து வந்த கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன்  சங்கீதாவுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சங்கீதா மருத்துவமனையில் உயிரிழந்தார்.