The danger of breaking the river bank and watering into the town People petition for immediate adjustment ...
திருவாரூர்
திருவாரூரில், ஆற்றின் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடைந்த கரையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "நெய்குப்பை கிராமத்தில் நரசிங்கம் ஆற்றின் கரையோரத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தில் கடந்த மாதம் வண்டல் மண் எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது குளத்தில் அதிகளவில் மண் எடுக்கப்பட்டுள்ளது.
அதிகளவு மண் எடுக்கப்பட்டதால் கடந்த பத்து நாள்களாக பெய்த தொடர் மழையால் நரசிங்கம் ஆற்றின் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆற்றின் கரையோரத்தில் மண் அள்ளத் தடை விதிக்க வேண்டும்.
உடைந்த கரையை உடனடியாக சீரமைக்க வேண்டும்" என்று கோரிக்கையை அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
