விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடியதை தட்டிக்கேட்டதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கனகராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக இருந்தவர் கனகராஜ். இவர் ஊராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்து அப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு  ஊராட்சி தண்ணீர் தொட்டி அருகே கனகராஜ் சரிமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதைதொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், சிவபாலன், முனீஸ்வரபிரபு, லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், வீட்டில் உள்ள குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சியதால் நாகராஜிற்கும் கனகராஜிற்கும் தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. 

நாகராஜின் செயலை கனகராஜ் கண்டித்து வந்ததால் ஆத்திரமடைந்த நாகராஜ் கனகராஜை, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.