கடலூர்,

வருகிற 25–ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு அன்றே புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2017–ம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் ஆட்சியர் ராஜேஷ் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து ஆட்சியர் ராஜேஷ் அளித்த பேட்டி:

“2017–ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 1–9–2016 அன்று வெளியிடப்பட்டது.

அப்போதைய பட்டியலின்படி மொத்தம் 2 ஆயிரத்து 256 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 19 இலட்சத்து 88 ஆயிரத்து 361 வாக்காளர்கள் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் சென்னை மற்றும் முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 1–9–2016 முதல் 30–9–2016 வரையிலான காலத்தில் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் – 2017 மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் தொகுதிக்குள் இடம் மாற்றம் தொடர்பாக மொத்தம் 73 ஆயிரத்து 794 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 68 ஆயிரத்து 464 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 5 ஆயிரத்து 330 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதன்பிறகு இடம் பெயர்ந்த வாக்காளர்கள், இறந்து விட்ட வாக்காளர்கள், இரட்டைப்பதிவு வாக்காளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 216 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன.

தற்போது வெளியிடப்பட்ட 2017–ஆம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலின்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 20 இலட்சத்து 37 ஆயிரத்து 563 வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் 10 இலட்சத்து 11 ஆயிரத்து 505 ஆண் வாக்காளர்கள், 10 இலட்சத்து 25 ஆயிரத்து 970 பெண் வாக்காளர்கள் இதரர் 88 வாக்காளர்கள் உள்ளனர்.

வருகிற 25–ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் தினம் கொண்டாட வேண்டும். அன்றே 18 – 19 வயதுடைய புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் மற்றும் குறுந்தகடு வழங்கப்பட்டது.

இதில் கடலூர் உதவி ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சண்முகம், அ.தி.மு.க. மாவட்ட பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி நாராயணசாமி, பாரதீய ஜனதா சிவக்குமார், நகர பொறுப்பாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.