The Clean workers Strike in madhurai
மதுரை
துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, மேலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மூலம் நகரிலுள்ள 27-வார்டுகளிலும் சேரும் குப்பைகள் அள்ளி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள நியமன துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளதால் நகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்ததன்படி ஒப்பந்த பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், ஒப்பந்த தொழிலாளர்களை துப்புரவு பணியாளர்களின் தென்மண்டல தொழிலாளர் சங்கம் சார்பில் நியமனம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு நியமனம் நடைபெறவில்லையாம்.
எனவே, ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்தில் தென்மண்டல தொழிலாளர் சங்கத்தினருக்கு முன்னுரிமை அளிக்க கோரியும்,
துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள், தொழிலாளர்கள் வைப்புநிதி போன்றவற்றை உடனே வழங்க கோரியும் நகராட்சிப் பணிகளைப் புறக்கணித்து பெண்கள் உள்பட சுமார் 80 துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவு பணியாளர்களின் இந்தப் போராட்டத்தால், மேலூர் நகர் பகுதிகளில் குப்பைகள் மலைபோல ஆங்காங்கே தேங்கி கிடந்தன.
