the Chief Minister did not take a speech with the transport workers

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தையில், ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்காமல் உள்ளார் என திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்பு கோடை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தும் என்பது நன்கு தெரிந்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பிரச்சனையில் தொழிற்சங்க நிர்வாகிகளை நேரடியாக அழைத்துப்பேசி ஒரு சுமுக முடிவை ஏற்படுத்த முன் வராமல், போக்குவரத்துத் துறை அமைச்சரை முன்னிறுத்தி பத்திரிகைகளில் பேட்டியும், அறிக்கையும் கொடுத்து கொண்டு இருப்பது முறையான அணுகுமுறையாக தெரியவில்லை.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு சுமுக முடிவை எட்டுவதற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முதலமைச்சர் எடுக்காமல் இருப்பது கவலையை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளை இயக்கும் இந்தப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1 லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மட்டும் சுமார் 60,000 பேர் உள்ளனர்.

இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் அவர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஓய்வூதியம், கமுடேசன், விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் போன்ற சுமார் ரூ.1700 கோடியை பெற முடியாமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தாங்கள் ஓய்வுபெற்று 2 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் போராடி வருகிறார்கள்.

அரசு நிறுவனமான போக்குவரத்துக் கழகம் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன் மாதிரியாக செயல்பட வேண்டும். அதற்கு மாறாக தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணத்தை கேட்டுப் போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏதோ அரசாங்கம் தங்களுடைய சொந்த நிதியில் இருந்து பணம் ஒதுக்குவது போல் விளம்பரங்கள் செய்து, அமைச்சரை விட்டு, பேட்டி கொடுக்க வைத்து தொழிலாளர்களின் ஆத்திரத்தை தினமும் அதிகரித்து வருவதால் தான் “பேச்சு வார்த்தையில்” தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.

மேலும் 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களிடம் இருந்து பிடித்தம் செய்துள்ள தொகைகள் ஏறத்தாழ 2000 கோடிக்கு மேலாக அரசு தங்களுடைய நிர்வாகச் செலவுக்கு பயன்படுத்தி இருப்பதும், அதனை ஓய்வூதிய டிரஸ்டில் சேர்க்கக் கோரியும், இதுவரை அந்த நிதி சேர்க்கப்படவில்லை என்பதும் தொழிலாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒப்பந்தப்படி தினக்கூலி வழங்க வேண்டுமென தினக்கூலி மற்றும் சேமப்பணியாளர்கள் நாள்தோறும் வலியுறுத்தியும், அதை இதுவரை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை. தினமும் 2 கோடி பொது மக்களை ஏற்றிச் சென்று, சேவை செய்து வரும் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகளை முதலமைச்சர் நேரடியாக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண முன் வரவேண்டும்.

மேலும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்திற்கு தக்க ஏற்பாடு செய்து உடனடியாக வழங்குவதற்கும் புதிய ஊதிய ஒப்பந்தம் உருவாவதற்கும் உரிய வாக்குறுதியை அளித்து, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்காமல், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.