விருதுநகர்

மத்திய அரசு நீட் தேர்வு மூலமாக தமிழ்நாட்டை நூறு ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று திமுகவை சேர்ந்த எ.வ.வேலு பேசினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றிய, நகர திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளைக்கோட்டை அண்ணா திடலில் நடைப்பெற்றது.

இதற்கு முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேசன், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் தமிழ்காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் ஏ.கே.மணி வரவேற்றார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் (தெற்கு) எம்.எல்.ஏ, தங்கம் தென்னரசு (வடக்கு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் எ.வ.வேலு பேசியது:

“திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்நாளில் நூறாண்டுகளை கடந்து நூற்றாண்டு விழாவையும் கொண்டாட வேண்டும் என்பதே எங்களது அனைவரின் ஆசை.

புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஆனால் 13 முறை தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்புகளை பெற்று சட்டமன்றத்தில் மக்கள் பணியாற்றிய பெருமை கருணாநிதி ஒருவரையே சாரும்.

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக குரல் எழுப்பியபோது முதல்வரும், அமைச்சரும் வாய் திறக்கவில்லை.

மத்திய அரசு ஒரே நாடு, ஒரே வரி என்று அறிவித்துவிட்டு, தண்ணீர் பாட்டில், நோட்டு புத்தகம், உயிர் காக்கும் மருந்து போன்றவற்றிற்கு 18 சதவீதம் வரை வரி விதித்துள்ளனர். திமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசால் போடப்பட்ட 12 சதவீத வாட் வரியால் மக்கள் பாதிப்படைவார்கள் என்றவுடன் வாட் வரியை குறைத்து அறிவித்தவர் கருணாநிதி.

திமுக ஆட்சி காலத்தில் வந்த சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டார்கள். மத்திய அரசு நீட் தேர்வு மூலமாக தமிழ்நாட்டை 100 ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் கல்வி துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். தமிழக பள்ளிகளில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நீட் தேர்வால் எந்த பலனும் இல்லை.

மக்கள் பிரச்சனை, மாணவர் பிரச்சனைகள் மத்திய அரசுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக திமுக அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால், எங்களை தடை மீறுவதாக கூறி கைது செய்கிறது அரசு.

டெல்லி செல்லும் முதலமைச்சர் தமிழ்நாட்டின் பிரச்சனைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப்பாராஜ், விஜயகுமார், சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் சாகுல் அமீது, வர்த்த பிரிவு துணைச் செயலாளர் வனராஜா உள்பட நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.