அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குவதால் இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடங்கியது அக்னி வெயில்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீட்டிற்குள் இருந்து வெளியே செல்லவே மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் வீட்டிற்குள்ளும் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக குளுமையான மலைப்பகுதியை மக்கள் தேடிச்செல்லும் நிலை ஏற்றபட்டுள்ளது. வெயிலின் தாக்கம் கடந்த ஒரு மாதமாகவே கொளுத்தி வரும் நிலையில் தற்போது அக்னி வெயில் இன்று முதல் தொடங்குவது மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டுள்ளது. அதிகபட்சமாக வேலூரியில் 105 டிகிரியாகவும், திருச்சியில் 104 டிகிரியாகவும், மதுரையில் 103 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
கத்திரி வெயில் தற்போது தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. எனவே மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட குளுமையான பொருட்கள் வாங்கி அருந்தும்படி மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மேலும் காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று தொடங்கவுள்ள அக்னி வெயிலானது அடுத்த மாதம் முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்களில் மின் வெட்டு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
