கரூர்

காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்படை சரி செய்து குடிநீர் வழங்காத காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளைக் கண்டித்து வெற்றுக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் உள்ள மணச்சணம்பட்டி காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் மணச்சணம்பட்டி காலனிக்குச் செல்லும் காவிரி குடிநீர் கடந்த ஒரு மாதமாக சரியாக செல்லவில்லை.

இதுகுறித்து தோகைமலை ஒன்றிய நிர்வாகம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். ஆனால் மணச்சணம்பட்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணியாளர்கள் சரிசெய்யாமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து குடிநீர் வழங்காத காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக காவிரி குடிநீர் வழங்க கோரியும் மணச்சணம்பட்டி காலனி பகுதி மக்கள் நேற்று குளித்தலை - மணப்பாறை சாலையில் தோகைமலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மணச்சணம்பட்டி பிரிவு சாலையில் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த தோகைமலை ஒன்றிய ஆணையர்கள் பன்னீர்செல்வம், விஜயகுமார், ஒன்றிய மேலாளர் திருஞானம், தோகைமலை வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போத, “குடிநீர் குழாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக புறப்பட்டுச் சென்றனர். இந்த போராட்டத்தால் குளித்தலை - மணப்பாறை சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.