முதலமைச்சர் ஒ.பி.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 133 பேர், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்குமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுக்க, வரும் 20ம் தேதி சந்திக்க உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து, 6ம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி தமிழக முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவை ஏற்கும்படி அதிமுக முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்று தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என தினமும், அவரை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுகவில் உள்ள சட்ட விதிகளை திருத்தி அமைத்து, அதனை தளர்த்தி அதிமுக பொது செயலாளராக சசிகலாவை பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க செய்வோம் என உறுதியளித்தார்.

முன்னதாக கடந்த 13ம் தேதி அ.தி.மு.க. எம்.பி.க்களில் சசிகலா புஷ்பாவை தவிர 49 எம்.பி.க்களும் சசிகலாவை சந்தித்து கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வலியுறுத்தினர். 25 மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 135 பேரும் வரும் 20ம் தேதி, சசிகலாவை சந்தித்து பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என அழைப்பு விடுக்க உள்ளனர்.

இந்த சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், ஏகமனதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதன்பிறகு, கட்சி பொறுப்புகளையும் அவர் தொடருவார் என தெரியவந்துள்ளது.