திருநெல்வேலி

சென்னையில் இரயிலில் அடிபட்டு உயிரிழந்த காவலாளரின் உடல், சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு காவலாளர்கள் 24 குண்டுகள் முழங்க மரியாதையுடன் எரியூட்டல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரத்தைச் சேர்ந்த பாலதண்டாயுதம் மகன் பிரபாகரன் (27). இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள 13–வது சிறப்பு காவல் படையில் காவலாளராக பணியாற்றி வந்தார். சென்னை ஆவடி சிறப்பு காவல்படை காவலர் விடுதியில் தங்கியிருந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் பிரபாகரன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இவர் ஆவடியை அடுத்த அண்ணனூர் இரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது இரயிலில் அடிபட்டு தண்டவாளத்தின் அருகே இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்தும் ஆவடி இரயில்வே காவலாளர்கள் அவரது உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

உடற்கூராய்வுக்கு பின்னர் காவல் வாகனத்தில் அவரது உடல் ஏற்றப்பட்டு, நேற்று காலை 6.30 மணிக்கு சொந்த ஊரான சுப்புலாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவரின் வீட்டின் அருகே உடல் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் காவலாளர்கள், , உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிறகு காவல் வாகனத்திலேயே பிரபாகரனின் உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திருநெல்வேலி மாவட்ட காவலாளர்கள் 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பிரபாகரனின் உடலுக்கு அவரது தந்தை பாலதண்டாயுதம் தீ மூட்டினார்.