The BJP is preparing a list of dmks children who are studying in English education says H. Raja ...

இராமநாதபுரம்

இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்தும் தி.மு.க.வினர் அவர்களின் குழந்தைகளை ஆங்கில கல்வியில் படிக்க வைக்கின்றனர். அவர்களின் பட்டியல் தயார் செய்து வருகிறோம் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தில் மோசமான ஊழல் அரசியல்வாதிகள் உள்ளனர். யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். வெளிநாடு தப்பிச் சென்றாலும் ஊழல் செய்தவர்களை திருப்பிக் கொண்டுவருவது எப்படி? என்று தெரியும். விஜயமல்லையா இன்னும் ஒரு மாதத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார்.

ஊழலில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை மீட்க ஊழலுக்கு எதிரான யுத்தம் நடத்தி வரும் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.

இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்தும் தி.மு.க.வினர் அவர்களின் குழந்தைகளை ஆங்கில கல்வியில் படிக்க வைக்கின்றனர். அவர்களின் பட்டியல் தயார் செய்து வருகிறோம்.

தற்போது தி.மு.க.வினர் தங்களின் பக்கம் குற்றம் திரும்புவதை கண்டு புதிதாக நாங்கள் இந்தி படிப்பதற்கு எதிரானவர்கள் அல்ல திணிப்பிற்கு எதிரானவர்கள் என்று பேசி வருகின்றனர். விரும்பி படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம்.

மருத்துவக்கல்லூரி தனியார் நடத்துவதால் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க முடியாது என்பதால் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து இவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகின்றனர். இவர்களின் இரட்டை வேடம் பலிக்காது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. கொடநாடு கொலைநாடாக மாறிவிட்டது. அந்த பங்களாவில் பணம், நகை, ஆவணங்கள் இருந்துள்ளது என்பது யாருக்கு தெரியுமோ அவர்கள்தான் கொலை செய்துள்ளனர். எனவே, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சீமான் அரசியலில் இருக்கும் போது ரஜினி இருக்கக்கூடாதா? ரஜினி அரசியலுக்கு தகுதியில்லாதவர் என்று கூறுபவர்கள் தகுதி இல்லாதவர்களாகவும், பயப்படுபவர்களாகவும் உள்ளனர். ரஜினி அரசியலுக்கு வர முழு தகுதி உள்ளது.

தனிக்கட்சி தொடங்குவதா? அல்லது ஒரு கட்சியில் இணைவதா? என்பதை அவர் முடிவு செய்ய வேண்டியது. ரஜினி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் பா.ஜ.க.வில் இணைந்தால் வரவேற்போம்” என்று அவர் பேசினார்.

இப்பேட்டியின்போது மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்டச் செயலாளர் ஆத்மா கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.