சிவகங்கை

சிவகங்கை, சிராவயலில் நடைப்பெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்களாக வந்த புகைப்பட கலைஞர் மற்றும் தேநீர் கடை தொழிலாளி ஆகிய இருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதில், 60-க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.


மஞ்சுவிரட்டுப் போட்டியையொட்டி சிவகங்கை மாவட்டம், கும்மங்குடிபொட்டல், அதிகரம், பரணிகண்மாய், தென்கரை கண்மாய், ஆகிய பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகளை பிடிக்க முயன்ற 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

அதேபோன்று, திருப்பத்தூர் அருகே சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தொழுவில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  

பின்னர் மாவட்ட ஆட்சியர் லதா, துணை ஆட்சியர் ஆஷாஅஜீத், மாவட்ட வருவாய் ஆய்வாளர் இளங்கோ, சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. தொழுவிலிருந்து 70-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதும் அவை சீற்ப் பாய்ந்தன.

மேலும் மஞ்சுவிரட்டினைப் பார்க்க வந்த காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ராமு என்ற ராமநாதன் (48) என்பவரும், புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே உள்ள தெக்கீயூரைச் சேர்ந்த தேநீர் கடைத் தொழிலாளி காசி (45) என்பவரும்  மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.

மஞ்சுவிரட்டுப் போட்டிக்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.