கோயம்புத்தூர்

“தமிழகத்தில் அதிமுக இணைப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா கட்சிகள் தங்கள் மதவாத கொள்கைகளை திணிக்க முயற்சிக்கின்றன. அதிமுக இணைப்பு தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் பேசினார்.

கோவை மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் ஜனநாயக மதசார்பற்ற இயக்கங்கள் இணைந்து “கோவை மக்கள் மேடை” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சி உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தில் உள்ள சாய்விவாஹ மகாலில் நேற்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கிப் பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆறுமுகம் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி.யும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு பேசியது:

“எந்த உணவை யார் சாப்பிடுவது என்பதை முடிவு செய்வது யார்? “பசு பாதுகாப்பு” என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள், சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள். சில இடங்களில் கொல்லப்படுகிறார்கள்.

இந்தியாவில் மத மோதல்களை உருவாக்க பா.ஜனதா முயற்சித்து வருகிறது. ஆனால், அது தமிழகத்திற்குள் வராததற்கு காரணம் பெரியார் செய்த பிரச்சாரம் தான்.

ஒரு மதத்தில் உள்ள கருத்துக்களை விமர்சிக்க உரிமை இல்லையா? ஆனால், அந்த உரிமை யாருக்கும் இல்லை என்ற நிலையை உருவாக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. மதங்களுக்கிடையே வெறுப்பை உருவாக்கி மோதலை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது.

தமிழகத்தில் அத்தகைய வெறுப்பு அரசியலை நாம் அனுமதிக்க கூடாது. அதற்கு இங்கு தொடங்கப்பட்டுள்ள கோவை மக்கள் மேடையை போன்று தமிழகம் முழுவதும் மக்கள் மேடையை உருவாக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவன் பேசியது:

“எல்லா சாதிகளிலும் முரண்பாடுகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பர்வார் அமைப்புகள் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தி ஆதாயம் தேட பார்க்கிறார்கள்.

அதிமுக இணைப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு காரணம் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வரும் பெரியார் கொள்கையை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

தலித் மக்களை தன்வயப்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் பாசிச போக்கு தலித்துகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் பேசியது:

“மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா கட்சி ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது மக்களிடையே பிரிவினையை தூண்டும் போக்கு.

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களாகத் தான் இருக்க வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜனதா ஆட்சி மூலம் செயல்படுத்த முயற்சிக்கிறது.

பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களும், தலித் மக்களும் பசு பாதுகாப்பு, லவ் ஜிகாத், தேச விரோத சக்திகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்து ராஜ்யத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. தீய சக்திகளின் கைகளில் தான் மத்திய அரசும், தேசமும் சிக்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து அமைப்புகள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் மத மோதல்களை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார், பா.ஜனதா ஆகிய கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக இணைப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா கட்சிகள் தங்கள் மதவாத கொள்கைகளை திணிக்க முயற்சிக்கின்றன. அதைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதிமுக இணைப்பு தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது” என்று அவர் பேசினார்.