The accident and the loss of compensation Court orders action to japti
திருவண்ணாமலை
அரசு பேருந்து ஏற்படுத்திய விபத்தில் பாதிக்கப்பட்ட மூவருக்கு இழப்பீடு வழங்காமல் ஏமாற்றிவந்ததால் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை நீதிமன்ற அமினா ஜப்தி செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாழை பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிவராஜ் (30). இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (31), செந்தில்குமார் (31) ஆகியோரும் வேலை செய்து வந்தனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி இவர்கள் மூவரும் வேலையை முடித்துவிட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அடுக்கம் கிராமத்தில் இருந்து மேல்வாழை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே மதுரை நோக்கிச் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்து இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் சிவராஜுக்கு இரண்டு கால்களும் துண்டானது. மேலும், ஐயப்பனுக்கு கால் மற்றும் தோல்பட்டையிலும், செந்தில்குமாருக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து கண்டாச்சிபுரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். இதன் மீதான விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து குறித்த சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நீதிபதி அளித்த தீர்ப்பில் சிவராஜுக்கு ரூ.8 இலட்சத்து 32 ஆயிரத்து 600-ம், ஐயப்பனுக்கு ரூ.1 இலட்சத்து 20 ஆயிரமும், செந்தில்குமாருக்கு ரூ.20 ஆயிரமும் மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுநாள் வரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வரும் மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி பக்தவச்சலம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடந்த மாதம் கோர்ட்டு அமீனா வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேருந்தை ஜப்தி செய்வதற்காக திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை பேருந்து நிலையத்திற்குள் கொண்டு வராமல் சென்று விட்டார்.
இந்த நிலையில் நீதிபதி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் நீதிமன்ற அமீனா வெங்கடேசன், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் பேருந்தை ஜப்தி செய்வதற்காக நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு மீண்டும் வந்தார்.
அங்கு நின்ற அரசு பேருந்தை அவர்கள் ஜப்தி செய்தனர். அதற்கான நோட்டீசும் அதன் மீது ஒட்டப்பட்டது. பின்னர் அந்த பேருந்து திருவண்ணாமலை நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
