The 9th day siege of the town will continue to struggle Atirutu Office of the Collector
தஞ்சை
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் விவசாயிகள் உள்பட ஏராளமான மக்களின் ஆதரவோடு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பது நாள்களாக தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
காவிரி உரிமை மீட்புக் குழு கடந்த 28-ஆம் தேதி முதல் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இரவு பகல் என பாராமல் தொடர்ந்து நடந்து வருகிறது.
“காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ரத்து செய்யக் கூடாது.
மேகதாதுவில் அணை கட்டுவதை தடை செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்கக் கூடாது.
காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
அனைத்து விவசாய கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
இறந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்றைய போராட்டத்தில் பெண்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் கலந்து கொண்டனர். மேலும், இந்தப் போராட்டத்தினால் ஆட்சியர் அலுவலகத்தில் காவலாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன், மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ‘‘விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும்’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
