புதுக்கோட்டை,
மத்திய அரசில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் மாநில அரசு பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு 2 ஆண்டுகள் வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 10-வது மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் மாவட்ட துணை தலைவர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் நாகராஜன் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். இதில் மாநில செயலாளர் குமார், மாநில துணை தலைவர் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மாவட்ட துணை தலைவர்கள் ரெங்கசாமி, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட இணை செயலாளர் பக்கீர் முகம்மது நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“7-வது ஊதிய மாற்றத்திற்கு பின்பும் நீடித்திருக்கும் ஊதிய முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக மாற்று பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணிநீக்க காலமான 41 மாதத்தை வரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். அந்த காலத்தில் அகால மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பித்து காத்திருப்போர் அனைவருக்கும் நிபந்தனையின்றி உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் தாய், தந்தையர், திருமணமாகாத மகள் மற்றும் மகனை இந்த திட்டத்தில் இணைத்து விரிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசின் கீழ் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் மாநில அரசு பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு 2 ஆண்டுகள் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அலுவலகத்திற்கு போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும். திருவரங்குளம், கந்தர்வகோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். மேலும் கந்தர்வகோட்டையில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும்” போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
