The 13 stores in the occupation were swept away in one day DMK The office was also demolished ...
விழுப்புரம்
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த பதின்மூன்று கடைகள் மற்றும் தி.மு.க. நகர அலுவலகத்தின் பெரும் பகுதியும் ஒரே நாளில் அதிரடியாக அகற்றப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், நேருஜி சாலையில் ஊரல் குட்டை ஓடை புறம்போக்கு இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக கடைகள் வைத்து நடத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளால் மழைக் காலங்களின்போது தண்ணீர் செல்ல வழியின்றி கால்வாய்கள் நிரம்பி சாலையிலேயே குளம்போல் தேங்கி நின்றது.
எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் நகராட்சி நில அளவைத் துறையினர் ஆய்வு செய்ததில் ஓடை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து பதின்மூன்று கடைகளும் மற்றும் நகர தி.மு.க. அலுவலகமும் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீசு அளிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அந்தந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நகர தி.மு.க. அலுவலக சுவர்களிலும் எச்சரிக்கை நோட்டீசு ஒட்டப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் கொடுத்த கால அவகாசம் முடிந்த பிறகும் ஆக்கிரமிப்புதாரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக விழுப்புரம் நேருஜி சாலையில் மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் தாசில்தார் சுந்தர்ராஜன், நகராட்சி ஆணையர் செந்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் மூன்று பொக்லைன்கள் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணி மாலை வரை நடைப்பெற்றது. ஆக்கிரமிப்பில் இருந்த பதின்மூன்று கடைகளும் மற்றும் நகர தி.மு.க. அலுவலகத்தின் பெரும் பகுதியும் நேற்று ஒரே நாளில் பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக விழுப்பும்– புதுச்சேரி சாலையில் நேற்று காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஆமை போல ஊர்ந்து சென்றன. முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகே போக்குவரத்து சீரானது.
