தேனி

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 10-ஆம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
 
தேனி மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் புதியதோர் இணையதளம் துவக்க விழா நேற்று நடைப்பெற்றது. 

இதற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆண்டிவேல், சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்டத்தலைவர் ஆர்.ராஜாக்கிளி, மாவட்டச் செயலர் க.சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர்  ஆர்.கிருஷ்ணாதாஸ், மாவட்ட அமைப்புச்செயலர் சே.காஜாமைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
இந்த விழாவில், "பணி பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்" உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 10-ஆம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது மற்றும் மறியல் போராட்டம் நடத்துவது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.  

இந்த விழாவின் இறுதியில் ஆசிரியர் ஆர்.இளங்கோ நன்றித் தெரிவித்தார்.