Asianet News TamilAsianet News Tamil

மாணவி தற்கொலை.. மதத்தை வைத்து வெறுப்பு அரசியல்.. பாஜகவை கண்டித்து அறிக்கை விட்ட கம்யூனிஸ்ட் கட்சி..

ஏழை மாணவி மரணத்தை, மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பாஜக-வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிப்பதாக கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

Thanjai School Student Suicide case
Author
Tamilnádu, First Published Jan 22, 2022, 8:33 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவியை அவர் தங்கியிருந்த விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்திய புகாரில் விடுதி வார்டன் சகாயமேரியை (62) போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியிருந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், பாஜகவினரும் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மரணம் தொடர்பாக அம்மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட திருக்காட்டுப்பள்ளி காவல்துறை இந்திய தண்டணை சட்டத்தின் பிரிவுகளான 307, 511, 75, 82 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளது. மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போதே அவரிடம் காவல்துறையினர் வாக்கு மூலமும் பெற்றிருக்கின்றனர். அந்த வாக்கு மூலத்தில் விடுதியில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் தனது தற்கொலை முயற்சிக்கு காரணம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவிவியின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்பந்தம் தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பாஜக-வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Thanjai School Student Suicide case

மேலும் மாணவி சிகிச்சை பெறும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரையும் அவரது பெற்றோர்களையும் சந்திக்க சென்ற இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை பாஜகவினர் தடுத்து நிறுத்தி தாக்க முயற்சித்ததுடன், காவல்துறையினர் ஏற்கனவே பதிவு செய்துள்ள பிரிவுகளை மாற்றி மதமாற்ற நிர்பந்தத்தால் தான் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக வழக்கை மாற்ற வேண்டும் எனவும் காவல்துறையினரை வலியுறுத்தி பிரச்னையை திசைதிருப்பும் வகையிலான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.பாஜகவினரின் இத்தகைய பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், மதமாற்றம் எனும் பிரச்னையை முன்வைத்து வீடியோவை தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.ஏழை மாணவி மரணத்தை, மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பாஜக-வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிக்கிறது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தின் அமைதியை குலைக்க திட்டமிட்டு முயற்சித்து வரும் பாஜகவின் குறுகிய அரசியல் முயற்சிகளை கண்டித்து மதச்சார்பற்ற சக்திகளும், அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios