காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவினர் தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார். இதனால், அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

காஞ்சீபுரம் காந்திசாலை, பெரியார் தூண் அருகே காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நேற்று நடந்தது.

இந்த போராட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

இதில் முன்னாள் மத்திய இணை மந்திரியும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு தலைவருமான எஸ்.ஜெகத்ரட்சகன் சிறப்புரை ஆற்றினார்.

இந்தப் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, காஞ்சீபுரம் நகர செயலாளர் ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டப் பந்தலில் காஞ்சீபுரத்தை அடுத்த ஒழையூர் மோட்டூரைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் குணசேகரன் (58) என்பவர் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த தி.மு.க.வினர் தடுத்து காப்பாற்றினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்ன காஞ்சீபுரம் காவல் ஆய்வாளர் லட்சுமிபதி, தனிப்பிரிவு துணை ஆய்வாளர் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், திமுகவினர் தாக்கப்பட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நானே இந்த முடிவை எடுத்தேன் என்று கூறினார்.

தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் அந்தப் பகுதி சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.