வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் போல், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலால், மருத்துவமனைகளை கண்காணிக்க, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதற்காக, அதே பகுதிகளில் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கியுள்ளனர்.

கடந்த, 2015ம் ஆண்டு, மேகாலயாவை சேர்ந்த 4 தீவிரவாதிகள் வேலூரில் சிகிச்சை பெறுவது போல் பதுங்கி இருந்த போது, மத்திய தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, 'மருத்துவமனை எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்து, அதற்கான சான்று வாங்கிய பிறகே, தங்க அனுமதிக்க வேண்டும்' என, போலீசார் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தீவிரவாதிகள் வேலூரில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க, மத்திய உள்துறை அமைச்சகம், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீசார் கூறுகையில், கோவையில், ஐ.எஸ்.ஐ., தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர், கைது செய்யப்பட்டனர். இதனால், நோயாளிகள் போல், வேலூர் மருத்துவமனைகளில் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. மத்திய உள்துறையின் உத்தரவின்பேரில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, பாஸ்போர்ட்டுடன் வருவோரின் நடமாட்டத்தை, கண்காணித்து வருகிறோம் என்றனர்.