தேனி

தேனி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை அகற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, விழுதுகள் இளைஞர் மன்ற இளைஞர்களுக்கு நீதிபதி எம்.கே.மாயகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், அரசு மற்றும் தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியன குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, மேகமலை வன உயிரினக் காப்பாளர் ஆனந்தன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வடிவேல், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சேதுராமன் மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை சார்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் குழுவினர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம் பகுதிக்கு உயர் நீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஆணையர் அப்பாதுரை, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.கே.மாயகிருஷ்ணன் ஆகியோர், தாமரைக்குளம் பேரூராட்சி, தென்கரை பேரூராட்சி, வடவீரநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், வைகை அணை, பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவர்களுடன், பெரியகுளம் வட்டாட்சியர் சுருளி மைதீன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி, தாமரைக்குளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் ஆகியோர் சென்றிருந்தனர்.

மேலும், சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை அகற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, விழுதுகள் இளைஞர் மன்ற இளைஞர்களுக்கு நீதிபதி எம்.கே.மாயகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.