திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்த நிலையில் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு.. மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்ரமணியசாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருக்கார்த்திகை தினமான இன்று காலை 7 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி வைர தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் இன்று மாலை ஆறு மணி அளவில் கோவிலில் பாலா தீபம் ஏற்றப்பட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்க பட்டியலிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.