விருதுநகர்

அருப்புக்கோட்டையில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 180 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் 63 தொடக்கப்பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீ சௌடாம்பிகா கான்வெண்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விழா ஒன்று நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு ஆட்சியர் சிவஞானம் தலைமை வகித்தார். இதில், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 180 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 63 தொடக்கப்பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளுக்கும் தற்காலிக அங்கீகார ஆணைகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளம் மற்றும் பால்ண்ணை வளர்ச்சி துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்கினர்.

இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவர்களை சிறந்த கல்வியாளர்களாக மாற்றுவதற்கும், அவர்களுக்கு சிறப்பான கல்வியை கற்று தந்து வேலைவாய்ப்பினை உருவாக்கி தரவும் கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்குவதற்கு சிறப்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் 10–ஆம் வகுப்பு முடித்து மேல்நிலை கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கும், 12–ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கும் கல்வி வழிகாட்டி நெறிமுறைகள் என்கிற முறையில் மாணவர்கள் கற்க வேண்டிய கல்வி பாடத்திட்டங்கள் எத்தனையோ இருந்தாலும், அதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கல்வி பாடத்திட்டங்களை நீங்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையை மாற்றி, மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தருகிற அடிப்படையில் 765 பாடங்களை நீங்கள் கற்கலாம் என்கிற நெறிமுறைகளை கற்று தருகிற வகையில் 1112 இடங்களில் இந்த கல்வி வழிகாட்டி நெறிமுறை பயிற்சி வழங்கப்பட்டு அதில் மூன்று இலட்சம் மாணவர்கள் பயன்பெற்று உள்ளனர்.

மாணவர்களுக்கு கல்வி கற்று தரும் முறையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளில் நவீன வகுப்பறை அமைகடக சுமார் 3000 பள்ளிகளுக்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கூட்டுறவு துறை மூலம் வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டு போல் மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளை மாணவ, மாணவிகள் எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழக மாணவ, மாணவிகள் எந்த தேர்வுகள் என்றாலும் எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெற்று சாதனை படைக்கிற மாணவ, மாணவிகளாக உருவாக்குவதற்கு எண்ணற்ற திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையில் தொடர்ந்து நிறைவேற்றப்படும்” என்று அவர் பேசினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது:

“அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற கொள்கையோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் மற்றொரு முயற்சியாக தற்போது மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகார ஆணையினை பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாக வழங்கி வருகிறது.

தற்போது வரை 1748 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கப்பட்டு, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 180 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்களில் நல்ல கல்வியை மாணவர்களுக்கு வழங்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் பேசினார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது:

“தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் 10 மற்றும் 12–ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு அறிவாற்றல் வளர அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்துடன் கூடிய கல்வியை அளிக்க வேண்டும். அதற்காகத்தான் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வியோடு சேர்ந்த கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை பெருக்குவதற்கும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கும் அரசு எண்ணற்ற திட்டங்களை கல்வித்துறையில் செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களை பள்ளிகளில் முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் முழுமையாக பின்பற்றி மாணவ, மாணவிகளுக்கு தரமான உடற்கல்வியோடு சேர்ந்த சிறந்த கல்வியை அளிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் ராதாகிருஷ்ணன் எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா (திருவில்லிபுத்தூர்), சுப்பிரமணியன் (சாத்தூர்), மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.