temples should be closed in dec 31st night petition in chennai high court
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோவில்களை திறந்து வைக்கக் கூடாது என்றும், இது ஆகம மீறல் என்று கூறி இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே, ஆங்கிலப் புத்தாண்டு நாளில் அதிகாலையில் கோயில்களுக்குச் சென்று இறை வழிபாட்டை மேற்கொண்டால், அந்த வருடம் முழுவதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை பரவி வருகிறது. அந்த வகையில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு ஹிந்துக் கோவில்களின் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் வழிபட வசதியாக திறக்கப் பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப் படுகிறார்கள்.
ஆனால் இது ஆகம விரோதம் என்று கூறி நள்ளிரவில் கோவில்களைத் திறந்து வைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரி, வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆகம விதிப்படி இரவு 9 மணிக்குள் ஆலயத்தில் பூஜையை முடித்து நடையைச் சாத்த வேண்டும். பின்னர் காலை நாலரை மணி முதல் 6 மணிக்குள் நடையைத் திறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆகம முறைப்படி, இரவு சயன அறை பூஜை முடிந்த பின்னர் நடை சாத்தப் படவேண்டும் என்பது ஆலய நடைமுறை. மேலும் கோவில்களை இரவில் திறந்து வைக்கக் கூடாது என ஆந்திர மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவையும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிவாலயங்களில் சிவ ராத்திரி அன்று மட்டுமே, ஆலயம் திறந்து வைக்க வேண்டும் என்றும், வைணவக் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி நாளிலும் மட்டுமே இரவு திறந்து வைக்க வேண்டும் என்றும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஆகம விதிகளை மீறி புத்தாண்டை முன்னிட்டு கோவில்களை நள்ளிரவில் திறந்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நாளை விடுமுறைக் கால அமர்வில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.
