குன்னம்,
குன்னம் அருகே உள்ள ஐயனார் கோவில் உண்டியலை உடைத்து பணத்தையும், குத்துவிளக்குகளையும் திருடிச் சென்றுள்ளனர். திருடிய மர்ம நபர்களை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓதியம் கிராமம் சுத்துகுளத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆகாசதுரை ஐயனார் கோவில் புதிதாக கட்டப்பட்டது. பின்னர் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவிலுக்கு ஓதியம் மற்றும் அதை சுற்றியுள்ள அசூர், பேரளி, குன்னம், அந்தூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து வாரம் தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் வந்து பொங்கல் வைத்து வழிபட்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
அப்போது அவர்கள் கோவில் உண்டியலில் காணிக்கையையும் செலுத்தி செல்கிறார்கள். மேலும், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் 2 பெரிய குத்துவிளக்குகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
இந்த கோவிலில் ஓதியம் கிராமத்தை சேர்ந்த ஆறு முகம் என்பவர் தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் பூஜை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கோவிலில் பூஜையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் நேற்று காலை மீண்டும் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார்.
அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பெரிய குத்துவிளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் கோவில் முன்பு இருந்த உண்டியலையும் மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. திருட்டுபோன உண்டியல் பணம் மற்றும் 2 குத்துவிளக்குகளின் மொத்த மதிப்பு ரூ.1 இலட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உண்டியல் பணம் மற்றும் குத்துவிளக்குகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
