மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்துக்கு கோயில் நிர்வாகம்தான் பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கடை உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டார்.

"மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சங்கரன்கோயிலில் உள்ள சங்கரநாராயணர் கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் ஆகியவற்றின் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீக்கு தடை விதிக்க வேண்டும். 

கோயில் கடைகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்" என அவற்றின் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இம்மனுக்கள், நீதிபதி வி.பாரதிதாசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகள் மற்றும் புதுமண்டபம் கடைகளின் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கு கடை உரிமையாளர்கள்தான் முழு பொறுப்பு என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஆனால், கோயிலில் ஒரே ஒரு மின் பணியாளர் மட்டும்தான் உள்ளார். எனவே, தீ விபத்துக்கு கோயில் நிர்வாகம்தான் பொறுப்பு. 

புதுமண்டபத்தில் உள்ள கடைகள் கோயிலுக்கு எதிரே உள்ளன. கடைகளை காலி செய்ய வேண்டும் என்றால் முறையான நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல், கடைகளை காலி செய்ய சொல்வது இயற்கை நீதிக்கு எதிரானது" என்று வாதிட்டனர்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, "கோயில் வளாகத்தில் விபூதி, குங்குமம், தேங்காய், பழம் விற்கலாம். ஆனால், இங்கு பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள், "கோயிலுக்கு அருகே மாற்று இடம் வழங்கினால், தற்போது உள்ள கடைகளை காலி செய்வதில் எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை" என்று கூறினர். 

இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதங்களை முன் வைக்க வேண்டியிருந்ததால் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.