temp conductor who is in mufti in a Govt bus
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின், 'ஸ்டிரைக்'கை முறியடிக்கும் வகையில், 40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை, களத்தில் இறக்கியுள்ளது போக்குவரத்து துறை. தொழிற்சங்கங்கள் பிடிவாதம் காட்டி வருவதால், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடிக்கிறது. மாநிலம் முழுவதும், 80 சதவீத பஸ்களின் போக்குவரத்து முடங்கி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்த ஊழியர்கள், 1.43 லட்சம் பேரில், முதல் நாளில், 1.13 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் இந்த போராட்டத்தினால் போக்குவரத்து துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்பை தடுக்கவும், நிலைமையை சரி செய்ய தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
ஒருபுறம் தற்காலிக ஓட்டுனர்கள் ரிவர்ஸ் எடுக்க தெரியாமல், சுவற்றில் மோதி, பள்ளத்தில் பேருந்தை விட்டு விபத்து நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் இந்த விபத்துக்களால் புதிய டிரைவர்கள் பஸ் ஒட்டுவதால் பயணிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். இன்னொரு புறம் தற்காலிக கண்டக்டர்கள் செய்யும் காமெடியை பயணிகள் ரசித்து வருகின்றனர்.
ஒருசில கண்டக்டர்களிடம் மட்டுமே காக்கி சட்டை இருப்பதால் பெரும்பாலான கண்டக்டர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து டிக்கெட் கொடுக்கின்றனர். ஒருசிலர் லுங்கியில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர்கள் கண்டக்டர் பைக்கு பதிலாக மஞ்சப்பையை ரூபாய் போட வைத்துள்ளது இன்னும் காமெடியை வரவழைக்கின்றன. கைலி அணிந்து மஞ்சள் துணி பையில் டிக்கெட் பணத்தை வசூலிக்கும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
