- Home
- Tamil Nadu News
- வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
தமிழகத்தில் ஒருபக்கம் பனியும், மறுபக்கம் வெயிலும் போட்டுத் தாக்கி வரும் நிலையில், 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் மழைக்காக ஏங்கும் மக்கள்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழைக்கான அறிகுறியே இல்லை. இரவிலும், அதிகாலையிலும் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், பகல் பொழுதில் வெயில் போட்டு பொளந்து வருகிறது. மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 4 மாதங்களுக்கு வெயிலின் கொடுமை தாங்க முடியாது.
ஆனால் பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெப்பம் போட்டுத் தாக்கி வருவதால் மழை பெய்யாதா? கொதிக்கும் அனலில் இருந்து வருண பகவான் விடுதலை தர மாட்டாரா? என மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்டேட்
இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் பிப்ரவரி 16 (இன்று) முதல் பிப்ரவரி 18ம் வரை வறண்ட வானிலை நிலவும்.
அதே வேளையில் பிப்ரவரி 19ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 20ம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பிப்ரவரி 21ம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 22ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை பெய்யுமா?
தமிழகத்தின் வடமாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 17) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 18) அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

