கன்னியாகுமரி

பள்ளிகளை முடக்க முற்படும் பள்ளிக் கல்வித் துறையைக் கண்டித்து ஏப்ரல் 11-ஆம் தேதி ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்துவது என்று ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தக்கலையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.  செயலர் விஜயராஜ் வரவேற்றார். 

நிர்வாகிகள் ஜோஸ்பென்சிகர், வினோத்,  ஜான் கென்னடி, சேவியர்,  சாந்த சீலன்,  ததேயு ஜஸ்டின்லஸ்,  சகாயமேரி,  சாந்தி புளோரா ஆகியோர் பேசினர். 

இந்தக் கூட்டத்தில், "அரசு உதவி பெறும் பள்ளிகளில் முரண்பாடான நடைமுறைகளை கையாண்டு பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களை உபரி என அறிவித்து, பள்ளிகளை முடக்க முற்படும் பள்ளிக் கல்வித் துறையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரில் ஏப்ரல் 11-ஆம் தேதி ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்துவது; 

சிறுபான்மை மொழிக்கு போதுமான ஆசிரியர்களை அனுமதிக்காமல்  வெளியிடப்பட்டுள்ள பணியிட நிர்ணய ஆணையை  திரும்பப் பெற வேண்டும்; 

ஊதியமின்றி பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பொதுச் செயலர் கனகராஜ் நிறைவுரை ஆற்றினார். பொருளாளர் அஜின்  நன்றித் தெரிவித்தார்.