Teacher who was sexually harassed by the eighth grade student Relatives of the student who hit the barrage ...
சேலம்
சேலத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கணித ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து காவலாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரியக்ள் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கோட்டக்கௌண்டம்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் கோட்டக்கௌண்டம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 400 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மொத்தம் 15 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.
அவர்களில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகன். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், முருகன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் பள்ளியில் நேற்று திரண்டனர். வகுப்பறையில் இருந்த ஆசிரியர் முருகனை அவர்கள் சரமாரியாக அடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ஆசிரியர் முருகனுக்கு இரத்த காயம் ஏற்பட்டது. இருந்தும் முருகனை விடாமல், மேலும் அடித்துக் கொண்டே இருந்தனர். சுற்றி இருந்த ஆசிரியர்கள் கேள்வி கேட்டும் அவர்கள் பதில் ஏதும் கூறாமல் தாக்குதலில் மும்முரமாக இருந்தனர்.
சத்தம் கேட்டு கிராமமக்கள் அனைவரும் பள்ளி முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உடனே சேலம் சூரமங்கலம் காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி காவல் ஆணையர் கமிஷனர் செல்வராஜன், சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர், ஆசிரியர் முருகனை காவலாளர்கள் மீட்டு ஜீப்பில் ஏற்றினர். காவலாளர்கள் இருதரப்பிலும் நடத்திய விசாரணையின்போது பெற்றோர் தரப்பில் கூறுகையில்,“பள்ளியில் படித்து வரும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், ஆசிரியரை அடித்து உதைத்தோம்” என்று தெரிவித்தனர்.
ஆனால், ஆசிரியர் முருகன் கூறுகையில், “அந்த மாணவிக்கு படிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமும் அறிவுரையும்தான் வழங்கினேன். என்னை தவறாக புரிந்து கொண்டு தாக்கி விட்டனர்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் முருகன் மற்றும் மாணவியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் மகளிர் காவல் ஆய்வாளர் வளர்மதி விசாரித்தார்.
இந்த விசாரணையில், "மாணவி சரிவர படிக்கவில்லை என்பதால் அவரை கண்டித்து அறிவுரை வழங்கினேன்" என்று ஆசிரியர் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
