teacher ask permission for suicide - petition to collector

தூத்துக்குடி

பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி தூத்துக்குடி ஆட்சியரிடம் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு ஆசிரியர் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கட்டாலன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இடைநிலை ஆசிரியரான இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வித்துறை அலுவலகத்தில் 2017–ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய மாறுதல் தடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்துவிட்டேன். என்னுடைய நியாயமான கோரிக்கை தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்த முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களாகிய நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். இதனால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனவே, நான் தற்கொலை செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். எங்களுக்கு நியாயம் வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.