சிவகங்கை

சசிகலாவின் நிலையிலிருந்து துணைப் பொதுச் செயலராக உள்ள டி.டி.வி. தினகரன், அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை காக்க போராடி வருகிறார் என்று சிவகங்கை மாவட்டச் செயலராக புதிதாக  நியமிக்கப்பட்டுள்ள கே.கே.உமாதேவன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனால் சிவகங்கை மாவட்டச் செயலராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கே.கே.உமாதேவன் செய்தியாளர்களிடம், “அதிமுக இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இவர்களுடன் இணைந்து 33 ஆண்டுகள் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் வழிநடத்தியவர் சசிகலாதான்.

சசிகலாவால் பதவிக்கு வந்த சிலர், அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

எனவே, சசிகலாவின் நிலையிலிருந்து துணைப் பொதுச் செயலராக உள்ள டி.டி.வி. தினகரன், அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை காக்க போராடி வருகிறார். அனைத்து தொண்டர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்து அதிமுகவை காக்க வேண்டும்.

சிவகங்கையில் அதிமுக கட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என்பதற்காக,  சில ஆண்டுகளுக்கு முன் அதிமுக தொண்டர்களிடமிருந்து ரூ.1 கோடி வசூலிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அந்தப் பணி தொடங்கப்படவில்லை.

அந்த நிதி முழுவதும், சிவகங்கை மாவட்டத்தில் சசிகலாவால் பதவிக்கு வந்தவர்களிடம் உள்ளது. விரைவில் அந்த நிதி மீட்கப்பட்டு, அதிமுக அலுவலகம் கட்டப்படும்” என்று தெரிவித்தார்.