Asianet News TamilAsianet News Tamil

திருவாரூரில் 1825 மகளிருக்கு  இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயம் - உணவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு...

Target fix for 1825 women in Tiruvarur - Food Minister
Target fix for 1825 women in Tiruvarur - Food Minister
Author
First Published Mar 12, 2018, 10:55 AM IST


திருவாரூர் 

திருவாரூரில் 2017-18 ஆம் ஆண்டில் 1825 உழைக்கும் மகளிருக்கு  இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக  உணவுத்துறை அமைச்சர்  ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு  இருசக்கர வாகனங்களை  உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று வழங்கினார்.  

அப்போது உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது: "உழைக்கும் பெண்கள், தங்கள் பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, அவர்கள் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

அதனடிப்படையில்,  2017-18  ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 1 இலட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீத மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பாரதப்  பிரதமரால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனையடுத்து,  திருவாரூர் மாவட்டத்துக்கு 2017-18 ஆம் ஆண்டு 1825 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.  

இதற்கு மானியமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் வரவு வைக்கப்படும். குடும்பத் தலைவராக உள்ள மகளிர்,  ஆதரவற்ற விதவை,   கணவரால் கைவிடப்பட்ட மகளிர்,  தாழ்த்தப்பட்டோர்,  திருநங்கைகள்,  35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
 
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால்  தொலைதூர நிறுவனங்களில் பணிபுரியும் உழைக்கும் மகளிர்,  போக்குவரத்து வசதி குறைந்த இடங்களில் பணிபுரியும் மகளிருக்கு  மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி,  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் மு. ராஜமோகன்,  வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி,  உதவி திட்ட அலுவலர்கள் மங்கையர்கரசி, காமராஜ்,  

கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி. மூர்த்தி, மாவட்ட ஊராட்சி  முன்னாள்  உறுப்பினர் பொன்வாசுகி ராமன், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios