வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழையும் , சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை கொட்டித்தீர்த்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என தெரிவித்துள்ளார். மேக வெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது என்றும் ஆனால் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது என்ற அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே நேற்று சென்னையில் அதி கனமழை பதிவானது என கூறினார். அதி கனமழையை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததாகவும் கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும் என்று கூறினார். வானிலையை கணிக்க மேலும் பல இடங்களில் ரேடார்களை பொருத்த வேண்டியது அவசியம் என்றும் நவீன கருவிகளும் தேவை என்றும் கூறினார்.

இதனிடையே தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். புத்தாண்டு தினமான நாளையும் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறினார்.

மேலும் 2 நாட்களுக்கு பிறகு படிபடியாக மழை குறையும் எனவும் , பின்னர் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறிய அவர், சென்னையில் நேற்று பெய்த திடீர் மழைக்கு கடற்பகுதியில் இருந்த வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியானது நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததே மழைக்கு காரணம் என்று விளக்கமளித்தார். கணித்த போது இருந்த வேகத்தை விட திடீரென வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வேகம் அதிகரித்து நிலப்பரப்பிற்கு வந்ததால் தான் அதி கனமழை பெய்ததாகவும் அவர் கூறினார்.

சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் டிஜிபி அலுவலகத்தில் 24 செ.மீ மழையும் ஆவடியில் 23 செ.மீ மழையும் எம்.ஆர்.சி நகரில் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. நேற்று சென்னையில் 7 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையினால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் மக்கள் மிகுந்த அவதிக்குயுள்ளாகினர். நேற்றிரவு முதல் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
