பெண்களை அவமதிக்கும் பாஜக: அமித் ஷாவுக்கு தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்த அமித் ஷாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பூ.நல்லமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் பதவியேற்றுக்கொண்டார். கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பொறுப்பேற்றார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த விழாவில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, விழா மேடைக்கு வந்த தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார். தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தரம்தாழ்ந்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தன்னை விமர்சித்த பாஜகவினருக்கு வெளிப்படையாக ஊடகங்களில் தமிழிசை கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, அண்ணாமலை வார் ரூம் பற்றி பாஜக மூத்த தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த பின்னணியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், தமிழிசையை உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை கண்டித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பூ.நல்லமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெண்களை அவமதிக்கும் பாஜகவை கண்டிக்கிறோம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா மேடையில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கண்டிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்கில் வெற்றியை நினைவு கூரும் இந்திய ராணுவம்: நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம்!
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மருத்துவர், முன்னாள் ஆளுநர், பெண் என்றும் பாராமல் பொதுமேடையில் அமித்ஷா நடந்து கொண்ட விதம்தான் பாஜகவின் கலாச்சாரம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. தாமரை தமிழ்நாட்டில் மலர்ந்தே தீரும் என ஒவ்வொரு மேடையிலும் சூளுரைத்து, தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக தாமரையை தூக்கி சுமந்தவரையே பாஜக தலைமை மதிக்கும் விதம் இவ்வளவுதான் என்பது வெட்கக்கேடானது.
பொதுவெளியில் தமிழ் பெண்ணை மிரட்டும் உள்துறை அமைச்சர், மக்களையே சந்திக்காத நிர்மலா சீதாராமனை இப்படி நடத்துவாரா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணியத்துடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அமித் ஷா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழிசையை கண்டித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. சுயமரியாதை உள்ளவராக இருந்தால், தக்க பதிலடி கொடுத்து தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும் எனவும் கேரளா காங்கிரஸ் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.